Saturday, 24 December 2011

கடவுள் தூதர் கிறிஸ்மஸ் தாத்தா

காண நீரும் வாருங்கள்
கிறிஸ்மஸ் வந்தால் பாடுங்கள்
கீதம் பாடி ஆடுங்கள்

குழந்தையாய் துள்ளி விளையாடுங்கள்
கூடி மகிழ்ந்து நேசியுங்கள்
கெட்டவைகளை மறந்திடுங்கள்
கேட்டால் கொடுப்பார் தேறிடுங்கள்

கைப்பை நிறைய பரிசு பெற்றிடுங்கள்
கொடுக்கும் இறைவனை வணங்கிடுங்கள்
கோடி நன்மைகள் அடைந்திடுங்கள்
கௌரவித்து யேசு கிறிஸ்துவை நேசியுங்கள்!

வணக்கம் சுட்டிகள், இன்னும் ஓரிரு தினங்களில் கிறிஸ்மஸ் வரப்போகிறது. இனி வீட்டில் உற்சாகம், குதூகலம்தான். சுட்டிகளுக்கு மிகவும் பிடித்தமானவர் நத்தார் தாத்தா. அவர் நமக்கேல்லாம் விருப்பமான பரிசுகளை அள்ளித் தருபவர். இந்நாட்களில் கிறிஸ்மஸ் தாத்தாவை போல் வேடமிட்டு பலர் சுட்டிகளை மகிழ்விப்பது வழக்கமானதொன்று.

அவர் எப்படிபட்டவர் எப்படி வந்தார் என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் அவ்வளவாக தெரியாது ஆனால் நான் தேடி அறிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன். நத்தார் தாத்தாவை கிறிஸ்தவ தந்தை என்றும் சண்டா குலோஸ் என்றும் பலவாறு கூறுவார்கள்.

கிட்டத்தட்ட 4வது நூற்றாண்டில் துருக்கியில் மிரா நகரில் வசித்தவர் புனித நிக்கலஸ் என்பவர். இவர் தனது வாழ்நாளில் பரிசுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் பழக்கத்தை வைத்திருந்தாராம். இவர் பல பெயர்களால் அழைக்கப்பட்டு போற்றப்பட்டவராம்.

இச் சரித்திரத்தின் வழி யேர்மனி,நெதர்லாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளில் கற்பனை பாத்திரமாக சண்க்ட் நிகொலவுஸ், சிண்ட்ரெர்கிலாஸ் என உருவானதாம். இப்படிதான் சண்டா குலோஸ் பாத்திரம் மருவி வந்ததாம். பல முக்கிய நாடுகளில் புனித நிக்கலஸ் சரித்திர மனிதராக நினைவுகூர்ந்து வழிபடுகிறார்களாம்
கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல்நாள் இரவுதான் நத்தார் தாத்தா தனது பரிசு பொதிகளை சுமந்தபடி ஆகாயத்தில் பறந்து வருவார். அவர் குழந்தைகளுக்கு பரிசுகளையும் இனிப்பு பண்டங்களையும் வீடுகளில் வைத்து விட்டு சென்று விடுவார் என்று பல கற்பனை கதைகள் கேட்டிருப்பீர்கள்.

இன்னுமொரு கதையும் உண்டு. நத்தார் தாத்தா உலகத்தில் உள்ள அத்தனை சுட்டிகளின் பெயர்,விபரம் அடங்கிய பட்டியல் வைத்திருப்பாரம்.

அதில் யார்யார் சமத்தான சுட்டிகள் யார்யார் குறும்புத்தனமான சுட்டிகள் என தரம் பிரித்து அதன்படி விளையாட்டு பொம்மைகள்,இனிப்பு வகைகள் கொண்ட பரிசுகளை சமத்தான சுட்டிகளுக்கும் சிலநேரம் நிலக்கரி அல்லது வேறுவகையான பரிசுகளை குறும்புச்சுட்டிகளுக்கு கொடுத்து விடுவாராம். ஆக சமத்தா இருந்தால் நல்ல பரிசுகள் கிடைக்கும்!

அதோடு கிறிஸ்மஸ் தாத்தாவை வைத்து  எடுத்த  பல திரைப்படங்கள், காட்டூன்கள் என நிறையவே பார்த்திருப்போம். அதில் சிலநேரம் உண்மையாகவே சுட்டிகளுக்கு நத்தார் தாத்தா வந்து பரிசுகள் வழங்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 

அதை பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும் சிலநேரம் கிறிஸ்மஸ் தாத்தா உண்மையில் எங்களிடமும் வருவது போல் தோற்றும் இல்லையா? அப்படி நடந்தால் எப்படி இருக்கும்! 

ஆகவே நீங்களும் உங்கள் வீடுகளில் கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள் இப்படி ஏதும் செய்து வையுங்கள். கிறிஸ்மஸ் அன்று நீங்கள் காலையில் எழும்பி பார்க்கையில் உங்கள் வீடுகளிலும் பரிசுகள் நிறைந்திருக்கலாம், யாருக்கு தெரியும் அது நத்தார் தாத்தா வைத்து சென்ற பரிசாகக் கூட இருக்கலாம்.

அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள்!



thanks 4.t.media


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home