Friday, 30 July 2010

இளம் பெற்றோர்களுக்கான‌ இணையதளம்


முதல் முறையாக தந்தையாவது, தாயாவதைவிட மகிழ்ச்சியான விஷயம் உலகில் வேறில்லை. தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்களுக்கு, அந்த செய்தியை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பும், பரபரப்பும் இருக்கும்.
.
நான் தந்தையாகிவிட்டேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வது பேரானந்தத்தை அளிக்கக்கூடியது என்றாலும், தாயையும், சேயையும் கவனிப்பதற்கு மத்தியில் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் போனில் இந்த செய்தியை தெரிவிப்பது ஒரு சுமையாகவே இருக்கும். சந்தோஷமான சுமைதான் என்றாலும் இதனை தீர்க்க ஒரு எளிய வழி இருக்காதா என்ற எண்ணமும், ஏக்கமும் பல இளம் தந்தைகளுக்கு ஏற்படலாம்.
அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் புதிய குழந்தையின் வருகையை உலகிற்கு எளிதாக உணர்த்தும் சேவையை வழங்கும் இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பேபி நோட்டிபை டாட் காம் எனும் அந்த இணைய தளத்தின் வாயிலாக இளம் பெற்றோர்கள் தங்களது புதிய அந்தஸ்தினை நண்பர்களோடும், தெரிந்தவர்களோடும் ஒரே கிளிக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
பிள்ளை பேற்றினை எதிர்பார்த்திருப்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, தங்களது இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் தொடர்பு முகவரிகளை இங்கு இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு குழந்தை பிறந்த உடனேயே அந்த மகிழ்ச்சியான தகவலை இந்த தளத்திற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பிவைத்து விட்டு, அதே மகிழ்ச்சியில் திளைத்தபடி மற்ற முக்கிய வேலைகளை கவனிக்க தொடங்கி விடலாம். நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் குழந்தை பிறந்த செய்தியை தெரிவிக்கும் பணியை இந்த தளமே மேற்கொள்ளும்.
எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் வாயிலாக குழந்தை பிறந்த செய்தி, தொடர்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆண் குழந்தைக்கு ஒரு நிறம், பெண் குழந்தைக்கு ஒரு நிறம் என்று இரு வேறு வண்ணங்களிலான வடிவமைப்பில் இந்த செய்திகள் அனுப்பி வைக்கப்படும்.
எனவே, வண்ணத்தைப்பார்த்த உடன் பிறந்தது ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதோடு, குழந்தை பிறந்த நேரம், அதன் எடை போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். இன்றைய பரபரப்பான உலகில் இணையத்தின் மூலம் எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ளும் நிலையில் இப்படி ஒரே கிளிக்கில் குழந்தை பிறந்த செய்தியையும் நட்பு வட்டாரம் முழுவதும் பகிர்ந்து கொள்ள முடிவது சிறந்த சேவை தானே.
இந்ததளத்தை உருவாக்கிய நபர் தான் தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது, மருத்துவமனையில் இருந்த படி அனைவருக்கும் தகவல் தெரிவிக்க திண்டாடிக் கொண்டிருந்தார்.அப்போது வரிசையாக அனைவரது இமெயில் முகவரிகளையும் எழுதிக் கொண்டிருந்த போது, எண்ணிக்கை 50ஐ கடந்து விட்டதாம்.
இப்படி ஒவ்வொருவருக்காக தனியே செய்தி அனுப்புவதை விட சுலபமான வழி வேறு கிடையாதா என்று அவர் இன்டர்நெட்டில் தேடிப் பார்த்து, அப்படி எந்த வழியும் இல்லாததல், தன்னைப்போன்ற இளம் தந்தையின் வசதிக்காக இந்த இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த தளத்தின் மூலமாக குழந்தை பிறந்த செய்தியை பகிர்ந்து கொள்வதோடு, குழந்தையின் முதல் புகைப்படத்தையும் வெளியிட்டு, தாய், சேய் நலமாக இருப்பதையும் தெரிவிக்கலாம்.அது மட்டமல்ல இந்த தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட உடன், அவரது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் அந்த விவரம் தானாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டு விடும். புது யுக பெற்றோர்களுக்கு பொருத்தமான இணையதளம் இதுவன்றோ.

http://www.babynotify.com/

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home