சமத்துவம் வளர்க்கும் பொங்கல் பண்டிகை!
நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டுதோறும் கொண்டாடினாலும், எந்தப் பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு.
ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை.
காரணம், பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளையோ, மதத்தையோ அல்லது மத குருவையோ மையமாகக் கொண்டதாக இருக்கும். ஆனால், உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே!
உழைப்பைப் போற்றுவதற்கும், இயற்கையை வணங்குவதற்கும் ஜாதி, மத பேதம் ஏது? இதனால்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்பட்டாலும், தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும்... ஏன், உலகம் முழுவதுமே கொண்டாடப்படுகிறது இந்தப் பொங்கல் பண்டிகை.
தமிழகத்தில் உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் பண்டிகை உழைப்பைப் போற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 4 தினங்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்...' என்பதற்கேற்ப போகித் தினத்தில் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து அழிக்கின்றனர். வீடுகளுக்கு புது வண்ணம் பூசி, புதுப் பொருட்களைச் சேர்க்கின்றனர்.
மறுநாள் பொங்கல் பண்டிகை. புதுப்பானையில், புது அரிசியிட்டு பொங்கல் வைக்கின்றனர். இதை சூரியக்கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
3ஆவது நாள் மாட்டுப்பொங்கல். உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல் இது. அன்று அதிகாலையிலேயே, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம் பூசி அவற்றுக்கு பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
இறுதி நாளாகக் கொண்டாடப்படும் காணும் பொங்கல் மற்றொரு முக்கிய அம்சம். இன்றைய தினத்தில் அனைவரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து உறவாடும் நாள். இதன்மூலம் உறவுகள் வலுப்படுகின்றன.
பெரும்பாலான ஊர்களில் இன்றைய தினத்தில்தான் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆண்களுக்கான வீர விளையாட்டுகள், பெண்களுக்கு என சில பிரத்தியேக போட்டிகள் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி.
இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடந்தாலும், ஜாதி மத பேதமின்றி அனைவரும் இதில் பங்கேற்று மகிழ்கின்றனர். முன் விரோதம், கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பவர்கள் கூட இந்தத் தினத்தில் ஒன்றிணைந்து போட்டிகளில் பங்கேற்று மகிழ்வதைக் காண முடியும். ஜாதி, மத, இன, மொழி என எந்த வேறுபாடுகளுக்கும் இந்தப் பொங்கல் விளையாட்டுக் களத்தில் இடமில்லை என்பது கண்கூடு.
பொதுவாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இப்படித்தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது, சமத்துவம் வளர்கிறது என்றாலும் வேறு சில மாவட்டங்களில் நடைபெறும் விசேஷ அம்சங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. ___
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home