Thursday 4 October 2012

ஸ்டீவ் ஒரு சகாப்தம்!


இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இதே திகதி அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானார் என்ற செய்தி வெளியாகியது.
ஸ்டீவ் தனது 56 ஆவது வயதில் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் காலமானார்.
ஜொப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரின் ஆயுட்காலம் வைத்தியர்களால் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. என்ற போதிலும் இச்செய்தி வெளியாகிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப உலகமே சற்று ஆடித்தான் போனது. 
உலகம் முழுவதிலும் உள்ள அப்பிள் பாவனையாளர்கள் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மக்கள் வீதிகளிலும், அப்பிள் ஸ்டோர்களின் முன்னாலும் ஸ்டீவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தத் தொடங்கினர்.
அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலகத் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஸ்டீவிற்கு தங்களது அனுதாபச்செய்தியினை ஊடகங்களின் மூலமாக வெளியிடத் தொடங்கினர்.
அப்பிளின் போட்டி நிறுவனங்களின் தலைவர்களும் கூட ஸ்டீவ் ஜொப்ஸிற்கு தமது அஞ்சலியை செலுத்தத் தொடங்கினர். 
ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக இணையத்தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்தன. 

ஸ்டீவ் ஜொப்ஸ் 
 இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.
 ஸ்டீவின் தந்தையின் பெயர் அப்துல்பதா ஜோன் ஜண்டாலி. அவர் சிரிய நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பெயர் ஜொஹான் கெரோல் சீகிபில்.
 இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முன்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தார். 
 எனினும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
 கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் தம்பதியினர் அதுவரை பெயரிடப்படாத தமது குழந்தைக்கு ஸ்டீவன் போல் ஜொப்ஸ் என பெயரிட்டனர்.
 ஸ்டீவின் வளர்ப்புத்தந்தையான போல் ஓர் இயந்திரவியலாளர். அவர் தனது இயந்திரவியல் மற்றும் இலத்திரனியல் அறிவை ஸ்டீவிற்கு சிறுவயது முதலே ஊட்டத் தொடங்கினார்.
 தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி முதலானவற்றை எவ்வாறு கழற்றிப் பூட்டுவது என்பது தொடர்பில் ஸ்டீவிற்கு ஜொப்ஸ் கற்றுத்தந்தார்.
அவர்களது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் இலத்திரனியல் பொருட்களுடன் விளையாடும் சிறுவனாக ஸ்டீவ் மாறியதுடன் இதுவே அவருக்கு பின்னாளில் இலத்திரனியல் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படவும் காரணமாயிற்று.
இளமைக்காலத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பட்டப்படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டவர் ஸ்டீவ்.
இதன்பின்னர் சிறிது காலம் ஆன்மீக வாழ்க்கையை நாடிய ஸ்டீவ் தன் நண்பரான வொஸ்னியாக்குடன் சேர்ந்து அப்பிள் நிறுவனத்தைத் தனது வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தார்.
 பல வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர்களைப் போன்று இவரும் தனது கண்டுபிடிப்புக்களை தனது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 இதனைத்தொடர்ந்து ஸ்டீவ் வாழ்வில் இடம்பெற்ற சில முக்கிய தருணங்கள் :
------------------------------------------------------------------------------------------------------------------------
 1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு  விற்பனைக்கு வந்தது.
 1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்பட்டது. த அப்பிள் ஐ கணனி அறிமுகப்படுத்தப்பட்டது.
 1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.
 1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாகத் தனது பங்குகளை வெளியிட்டது. 110 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக்    கொண்டது.
 1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரித்தது.
 1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வந்தன.
 1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வந்தன.
 1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும்  வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகினர்.
  1986: ஜொப்ஸ், 'நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழில்நுட்பம் கொண்ட கணனிகளை  பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத் தொடங்குகினார்.
 1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு வந்தது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.
 1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை  உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.
 பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்தின.
 ஜொப்ஸ், லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.
 1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன்  அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.
 1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாகப பதவியேற்கின்றார்.
 2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
 2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.
 இவ்வாறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும்  ஸ்டீவ், தொழிநுட்ப உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இந்நிலையில் 2004  ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.
 ஸ்டீவ்வின் வாழ்க்கை முடிந்தது எனப் பலரும் தெரிவித்த போதிலும் தனது பணியினை சரிவரச் செய்வதிலிருந்து அவர் தவறவில்லை.  ஜொப்ஸ் 2006 ஆம் ஆண்டு  டிஸ்னி நிறுவனத்தின் அதிகூடிய பங்குகளைக் கொண்ட தனி நபரானார்.
 இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிட்டது.  கையடக்கத்தொலைபேசி வரலாற்றையே மாற்றிய அமைத்த சாதனமாக இதைக் குறிப்பிடலாம். அனைவரதும் அமோக வரவேற்பினைப்  பெற்ற இது விற்பனையிலும் சாதனை படைத்தது.
 அப்பிளின் ஆதிக்கம் தொழிநுட்ப உலகின் உச்சத்தை அடைந்து கொண்டிந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜொப்ஸ் சிறுநீரக மாற்றுச்  சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
 2010, 2011 காலப்பகுதியில் ஸ்டீவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.  இதனையடுத்து 2011 ஜனவரி 17 அன்று ஜொப்ஸ்  2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவித்தமையானது ஸ்டீவ் தனது ஆயுட்காலத்தின் இறுதிக்கட்டத்தை  அடைந்து விட்டதனைக் காட்டியது.
இதன் அடுத்தபடியாக 2011 ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின்னர் ஜொப்ஸை வெளியுலகினர் யாரும் காணமுடியாமல் போனதுடன் அவர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை
 இந்நிலையில் 2011 ஒக்டோபர் 5 ஆம் திகதி  ஜொப்ஸ் காலமானதாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.
 எனினும் அவரின் பூதவுடலின் புகைப்படம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
 மக்கள் விரும்பியதை உருவாக்கி சந்தையில் வெற்றி பெறுபவர் ஒரு ரகம் என்றால் தாம் உருவாக்கியதை மக்கள் விரும்பச் செய்வது இன்னொரு ரகம். அந்த வகையில் ஸ்டீவ் ஜொப்ஸ் இரண்டாவது ரகம்.
 அப்பிளின் புரட்சிகரக் கண்டுப்பிடிப்புகளை உலகமே ஏற்றுக்கொள்ள வைத்தவர் ஸ்டீவ்.
 ஸ்டீவ் கடும்போக்காளர், பிடிவாதக்காரர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது எனினும் தனது புரட்சிகர கண்டிபிடிப்புக்களை மற்றையோர் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது இலகுவானதொரு காரியம் அல்ல. இதனையே ஆங்கிலத்தில் 'You need to be rebellious to be innovative' என்று கூறுவார்கள்.
 தனது நவீன சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதற்காக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இது அவரை சற்று கடும்போக்காளராகக் காட்டியது உண்மையே.
 எனினும் நாம் ஸ்டீவ் என்ற பெயரைச் சொன்னவுடன் ஞாபகம் வருவது அவரது கண்டிபிடிப்புகளே அன்றி அவரது குணாதியசங்கள் அல்ல.
 ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமையை யாரும் மறுக்கமுடியாது.  தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் உள்ளமைக்குக் காரணம் இவரது உழைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனையே ஆகும்.
 ஸ்டீவ் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அவர் அக்கறை கொண்டிருந்தார். 
 ஸ்டீவ் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸிற்கு இருந்ததுடன் கண்டுபிடிப்பாளர், முயற்சியாளர், சிறந்த தலைவர், சிறந்த சந்தைப்படுத்துனர், சிறந்த பேச்சாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.
 "பசித்திரு. முட்டாளாயிரு" (Stay Hungry, Stay Foolish)  என்ற ஸ்டீவின் அறிவுரையானது பல விடயங்களை எமக்குக் கற்றுத்தருகின்றது அதாவது பசித்திருக்கும் போது, பசிபோக்க வேண்டுமென்ற எண்ணம் அதற்கான வழிகளைச் தேடுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணும். முட்டாளாயிருப்பதனால், ஒவ்வொரு பொழுதும் புதிய விடயங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.
 இது போன்ற பல அர்த்தமுள்ள அறிவுரைகளை உலகிற்கு வழங்கியுள்ள ஸ்டீவின் மறைவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரின் மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகும்.
 தற்போது நாம் உபயோகப்படுத்தும் கணனி, குரலை இணங்காணும் தொழிநுட்பமான 'Siri' , இணையம் போன்ற பல தொழிநுட்ப வளர்ச்சிகள் தொடர்பாக 1983 ஆம் ஆண்டு ஆற்றிய உரையொன்றில் ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளார்.
 இத்தகைய தூரநோக்கு சிந்தனையுடன் தொழிநுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் காலப்பகுதியிலேயே எதிர்வு கூறியவர்களில் ஸ்டீவ் ஜொப்ஸ் முதன்மையானவர்.
 ஜொப்ஸ் மறைந்த போதிலும் அவரின் ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர்  போன்ற ஒரு புரட்சிகர சிந்தனைகளைக் கொண்ட, தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட, தன்னம்பிக்கையின் முழு உருவமானதொரு நபரை தொழில்நுட்ப உலகம் மீண்டும் பெறுமா என்பது சந்தேகமே!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home