Wednesday 18 May 2011

மைக்ரோசாப்டை காலி செய்யுமா கூகிளின் புதிய குரோம் லேப்டாப்


கணிணி மற்றும் மென்பொருள்கள் சந்தையின் முதல்வரான மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ்க்கு இது போதாத காலம் போல. கூகிள் நிறுவனத்தால் இணைய வர்த்தகம் மைக்ரோசாப்டுக்கு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் மென்பொருள்கள் சந்தையிலும் அடிவிழப் போகிறது. கூகிளின் புதிய இயங்குதளமான குரோம் (Chrome OS Notebooks) இப்போது லேப்டாப்களில் பொதிந்து விற்பனைக்கு தயாராகிவிட்டன.

மேகக் கணிணியகம் என்று சொல்லப்படும் Cloud Computing முறையில் குரோம் இயங்குதளம் செயல்படப் போகிறது. சரி இதனால் மைக்ரோசாப்டுக்கு என்ன பாதிப்பு என்று பார்ப்போம். மைக்ரோசாப்டின் முக்கிய மென்பொருளான MS-Office விண்டோஸ் இயங்குதளத்தில் செயலபடக்கூடியது. உலகெங்கும் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆபிஸ் தொகுப்பால் மைக்ரோசாப்டுக்கு வருமானம் பல கோடிக்கணக்கில் கிடைக்கிறது.

MS-Office தொகுப்பைப் பயன்படுத்த விண்டோஸ் இயங்குதளம் வேண்டும். இதிலும் வருமானம் வருகிறது. ஆனால் குரோம் லேப்டாப்பில் இயங்குதளம் தேவையில்லை. தனிப்பட்ட மென்பொருள்கள் தேவையில்லை. குரோம் வலை உலவியின் பெயரால் வந்திருக்கும் குரோம் இயங்குதளம் ஒரு இணைய மேடையாக (Google Web Platform) செயல்படுகிறது.


”எப்போதும் இணையத்திலேயே இருங்கள்” இதைத்தான் கூகிள் சொல்கிறது. MS-Office தொகுப்புக்கு மாற்றாக இருக்கவே இருக்கிறது Google Docs. இதன் மூலம் ஆன்லைனில் எப்போதும் ஆபிஸ் தொகுப்புகளைப் பயன்படுத்த முடியும். சர்வர் பிரச்சினை எதுவுமே இருக்காது. மேலும் உங்களின் முக்கிய கோப்புகளை ஆன்லைனில் பயன்படுத்தும் போது அவற்றிற்கு பாதுகாப்பு அதிகம். வைரஸ் பிரச்சினை, கணிணி கிராஷ் போன்றவற்றால் உங்கள் கணிணியில் ஏற்படும் பிரச்சினைகள் ஆன்லைனில் இல்லை. முக்கியமான விசயம் என்னவென்றால் இதில் ஆண்டிவைரஸ் தேவையில்லை என்பதே.

மேலும் ஆபிஸ் தொகுப்பை மட்டும் வைத்து விட்டால் போதுமா? கணிணியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் போன்ற அனைத்து முக்கியமான மென்பொருள்களும் விளையாட்டுகளும் போட்டோ எடிட்டர் போன்ற பயன்பாடுகளும் கூகிளின் Chrome Storeஇல் வழங்கப்படுகின்றன.HTML5 மற்றும் WebGL போன்ற உயரதர தொழில்நுட்பத்தால் இணையத்தில் மேம்பட்ட வேலைகளை வேகமாக செய்யமுடியும். Adobe Flash Player இல்லாமலே WebGl தொழில்நுட்பத்தால் இணையத்தில் நன்றாக படங்களைப் பார்க்க முடியும்.


இதனால் பல பெரிய நிறுவனங்கள் இணைய இணைப்பை வைத்திருந்தால் போதும். அவை விண்டோஸ், MS-Office போன்றவை இல்லாமல் அந்த காரியங்களைச் செய்து கொள்ள முடியும். விண்டோஸ் மற்றும் ஆபிஸ் தொகுப்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

இண்டெல் நிறுவன புராசசரில் செயல்படும் குரோம் இயங்குதள லேப்டாப்களை ACER மற்றும் SAMSUNG நிறுவனங்கள் தயாரித்துள்ளன. வெறும் 8 வினாடிகளில் கணிணி பூட் ஆகி இயங்குதளத்தில் நுழைந்து இணையத்திற்கு கொண்டு செல்லும் என கூகிள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் இப்போது கலக்கத்தில் இருக்கின்றன. இதன் வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதைப்பற்றிய கூகிளின் எளிமையான வீடியோ ஒன்று கீழே பாருங்கள்.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home