Wednesday, 26 January 2011

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்!


“எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்”

- ஜூலியன்.

பகுதி 1
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தண்ணியடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் ‘விக்கிலீக்ஸ்’ (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

விக்கி’ என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.

உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் ‘ஆளடி’ அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :) . ‘சர்வ அதிகாரமும் படைத்த’ என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் ‘அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்’ என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. ‘தொழில்நுட்பம்’!!!.

‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல’ என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D . விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே ‘வெட்டிப் போடும்’ தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.

விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.

விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;) , போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்….

பகுதி 2

ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, ‘ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?’ என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது ‘விக்கிலீக்ஸ்’.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.

16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே “It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police” என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D .
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே ‘ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்’ என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே ‘சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்’ என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். ‘வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்’, இவை ஜூலியனின் உபதேசங்கள்.
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் ‘ஓ..ஒரு தெய்வம்… படி தாண்டி வருதே..’ என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் ‘விக்கிலீக்ஸ்’.

ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக
மாறிவிட்டது. பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே?, எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.

பகுதி 3

Tor – The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் ‘இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?’ என்றெல்லாம் கேட்கக் கூடாது :D ;) .
முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.Tor – The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் ‘இலவச மென்பொருள்’ என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது :) .
Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் ‘Relay’ என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய,
குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.
இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது?. அடுத்த பகுதியில்.

பகுதி 4
ஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப்பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு. நம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் ” நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்’ என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.வெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் “நேர்மையான’ போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.
நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. ‘இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை ‘ இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது’, இல்லை இல்லை ‘அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை ‘அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்’ என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.

ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.
பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D ). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.

பகுதி 5
எந்த ஒரு நாட்டுக்கும் மிக முக்கியமான, பிரதான, தலையாய, உயிர்நாடியான இப்படி பலவகையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் அதன் பாதுகாப்புத் துறை. அவற்றின் ஆவணங்களை அப்படியே விருந்து வைப்பதென்பது கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் தெளித்து விளையாடுவதை போல கிளுகிளுப்பானது. அதிலும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உலகிலேயே சக்திவாய்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் மிக முன்னோடி என்று பலராலும் வாய்பிளந்து பார்க்கப்படும் ஒரு துறை. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் தன் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது. இதே போன்ற வெளியீடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆளாகியிருந்தால் ‘நீ என்னத்த பெரிசா பண்ணிட்ட, போன வருசம் அவன் எப்படி அடிச்சான் தெரியுமா, போன வாரம் கூட எத்தன பேரு.. ‘ என்று கமுக்கமாகிப் போயிருக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் இந்திய சி.பி.ஐ இணையத்தளம் பாகிஸ்தான் பங்காளிகளால் ஹேக் செய்யப்பட்டது ஒரு உதாரணம்.ஜூலியனுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தே இருந்தது. அமெரிக்காவிற்கு எதிரான தனது ஆப்கான் போர்க் குறிப்பு வெளியீடுகளுக்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை விக்கிலீக்ஸ் தளத்தின் பலத்தை, சட்டரீதியானப் பாதுகாப்பினைப் பரிசோதித்து உறுதி செய்து கொண்டே களமிறங்கினார். கேக் சாப்பிடும் போது சுற்றிலும் கடித்து சாப்பிட்டு விட்டு பின்பு கடைசியாக நடுவிலுள்ள செர்ரிப் பழத்திற்கு பாய்வதைப் போல, ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடுகள் சோமாலியா, கென்யா, ஸ்விஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் தேவாலயக் குழுமம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சாரா பாலின் ;) தொடங்கி அமெரிக்காவின் ஈராக் இராணுவ நடவடிக்கைகள் வரை ஒத்திகை பார்த்து விட்டே ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியிடப்பட்டன.ஜூலியனின் வாழ்க்கை குறித்துக் கேள்விப் படும் போது தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே, உண்மையின் உறைவிடமே என்று வைரமுத்து, வாலி வகைக் கவிதைகள் எழுதத் தோன்றினாலும் ஜூலியனின் வாழ்க்கை மிக கடினமானது, மன அழுத்தம் நிறைந்தது. ஜூலியனுக்கென்று சொந்த வாழ்க்கை ஏதுமில்லை. எந்த விமான நிலையத்தையும் ஒரு சாதாரணப் பயணியாகக் கடந்ததில்லை, ஒவ்வொரு முறையும் பலமணி நேரச் சோதனையும், அவரது மடிக்கணினி முழுதும் பிரதியெடுக்கப்படுதலையும் தவிர்க்க முடிந்ததில்லை. ஜூலியன் சாதரணமாக தொலைபேசியில் பேசுவது கூட மிக மெல்லிய குரலில், சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் பேசுவது போல மிகுந்த இடைவெளி விட்டு, மிகக் குறைந்த வார்த்தைகளைப் பய்னபடுத்தியே பேசுவது வழக்கம். இது வரை யாருமே ஜூலியனை, ஒருமுறைத் தொடர்பு கொண்ட எண்ணில் மறுமுறை தொடர்பு கொண்டதில்லை. எவற்றையெல்லாம் மாற்றாவிட்டால், மாட்டிக் கொள்வோம் என்பது ஜூலியனுக்கு அத்துப்படி. முதல் பரிட்சார்த்த முயற்சியாக சோமாலியாவின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர், தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு நம்பிக்கையான விவசாயக் கூலிகள் வேண்டி எழுதியக் கடிதம் வெளியிடப்பட்ட போது அது உண்மையா, பொய்யா என்ற விவாதமே மேலோங்கி நின்றது. சோமலியாவின் பதிலோ, மெளனம் சம்மதம் :) . இதுவே பின்னாட்களில் தனது வெளியீடுகளோடு பெரிய பத்திரிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கான காரணம். ஊழலில் நமக்கே சவால் விடும் அளவுக்கு முன்னோடியான கென்ய அரசாங்கத்தின் ஊழல் தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக கென்யாவின், நைரோபியில் வாசம் செய்து கொண்டிருந்த ஜூலியன் ஒரு அதிரடியான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிட்டது. ஊழல் ஆவணங்கள் வெளியிடப்பட்ட மிகச்சரியாக ஒருவாரத்தில் ஜூலியன் தங்கியிருந்த ஒரு ரகசிய வீட்டில், நள்ளிரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்று தீபாவளி கொண்டாட முயற்சி செய்த போது, கென்யாவின் தரத்தை எடைபோட்டு ஜூலியனின் பாதுகாப்புக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் துரத்தி விட்டனர். அன்றிரவுக்குப் பிறகு யாரும் ஜூலியனைக் கென்யாவில் பார்க்கவில்லை.
அடுத்து ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்கிகளின் முறைகேடுகள், முறையற்ற நிதி கையாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் குய்யோ, முறையோவென தங்கள் வேட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூப்பாடு போட்டன. ஸ்விஸ் வங்கி அமெரிக்காவிலுள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விக்கிலீக்ஸ் தளத்தின் அமெரிக்க வழங்கிகளைச் செயலிழக்கச் செய்தது. ஒரு தளத்திற்கு வழங்கியென்பது ஒரே நேரத்தில் எத்தனை வேண்டுமானாலும் மாற்று ஏற்பாடாக செய்து வைக்கலாம். உலகமெங்கும் இணைய வல்லுநர்களை ஆரவலர்களாகக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் தளத்திற்கு கண்ணசைவில் அடுத்தடுத்த வழங்கிகள் தயாரான நிலையிலிருக்குமென்பதால் ஜூலியன் இதையெல்லாம் சட்டைச் செய்யவில்லை. இணையக் கோப்புகள் வழங்கிகள்(file servers), இணைய முகவரி வழங்கிகள்(dns servers) குறித்தும், அவை செயல்படுவிதம் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே செல்லவும் :).

இப்படி அமைதியாக, மிகப் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஜூலியனையும் சீண்டிப் பார்த்து, சீற வைத்த சம்பவங்களும் நடந்தது.. அடுத்த பகுதியில்.

பகுதி 6
அடிப்படையில் ஜூலியன் மிக அமைதியான நபர். எந்தவொரு அலட்டலோ, மேதாவித்தனமோ இல்லாமல் மென்மையாகப் பேசிப் பழகும் ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் மட்டுமே உயிர்நாடி. அதற்கென்று பாதிப்பு வரும்பொழுது மனிதர் புயலென சீறுவதில் நொடிப்பொழுதும் தயங்குவதில்லை. ஊடக சுதந்திரத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் சில இணையத் தளங்களைத் தடை செய்யப் போவதாகச் செய்த அறிவிப்பு, மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. ஊரெல்லாம் துயர்துடைக்கும் மண்ணின் மைந்தன், தன் வீட்டில் விசேஷம் என்றால் சும்மா இருக்க முடியுமா?. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரெலியாவின் ஊடகச் சுதந்திரக் கோவணம் காற்றில் பறக்க விடப்பட்டது, எந்தெந்த இணையத் தளங்கள் தடைசெய்யப்படப் போகின்றன என்ற பட்டியல் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அவற்றுள் சிறார் -பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், மற்ற சட்ட விரோத தளங்களோடு, சில நல்ல தளங்களும் இருந்தது. ஊடகங்களின் கேள்விக் கணைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் துளைத்தெடுத்தன. முதலில் அப்பட்டியலை மறுத்த ஆஸ்திரேலியா, பின்னர் ஒருவாறாக ஒப்புக் கொண்டது.

ஆஸ்திரெலியாவுக்கு கொடுத்த அல்வாவின் விளைவு ஜெர்மனியில் விளைந்தது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஜெர்மனி இணைய முகவரியின்(www.wikileaks.de) உரிமையாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலருமான தியோடர் என்ற ஜெர்மானிய இளைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடந்தது. விஷயம் கேள்விப் பட்டது ஜூலியன் சுருக்கமாக, காட்டமாக ஊடகங்களின் மூலம் ஒரு அறிக்கை விடுத்தார். அது அறிக்கை என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருத்தமானது. ஒரு நிறுவனத்தின் சார்பில் என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதன், வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கெதிராக விடுத்த அறைகூவலாகவும், ஊடகவியலாளார்கள் பெருமை கொள்ளும் விதமாகவும் அந்த அறிக்கை அமைந்தது. “நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்”, இது தான் அந்த அறிக்கையின் கடைசி வரிகள்.
ஜூலியனிடம் மோதினால் என்ன நடக்கும் என்று தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களான ஜெர்மனியர்களின் அரசாங்கத்திற்குப் புரிந்தே இருந்தது. அதற்குப்பின் விக்கிலீக்ஸ் சம்பந்தமாக ஜெர்மனி எதிலும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக பலநாடுகளிடம் சோதனை அனுபவம் பெற்ற ஜூலியன், அமெரிக்காவின் பக்கம் திரும்பினார். அன்று பார்வையைத் திருப்பியவர் தான், இன்று குரல்வளைப் பிடி, பிடித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்கிறது. அமெரிக்காவில் ஜூலியனிடம் முதலில் சிக்கியது ஒரு தேவாலயக் குழுமம் (church of scientology). கிட்டத்தட்ட நம்மூர் சித்துவேலை பகவான்களின் ஆசிரமக் குழுமங்கள் மாதிரி, சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. அதில் நடக்கும் உள்ளடி வேலைகள், முறைகேடுகள், சில போதைப் பொருட்கள் கையாடல் சம்பந்தமாக என்று நீள்கிறது ஆவண விவரங்கள். அனைத்தும் ஒருநாள் அதிகாலை பனிப்பொழுதில் விக்கிலீக்ஸ் தளத்தில் மங்களம் பாடப்பட்டது. அடுத்த சில தினங்களில் தேவாலயக் குழுமத்தின் தலைமை, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது. ‘பேரன்பும் மதிப்பிற்கும் உரிய விக்கிலீக்ஸ் சமூகத்தாருக்கு, அனேக நமஸ்காரங்கள். தாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின் படி எங்கள் குழுமத்திற்குச் சொந்தமானவை. அவற்றை நீங்கள் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். நீங்களாக நீக்கினால் உத்தமம். இல்லையேல்…’ என்ற கோணத்தில் சென்றது அக்கடிதம். சும்மாவே ஆட்டம் காட்டும் ஜூலியனுக்கு, இதைப் படித்ததும் கேட்கவா வேண்டும். “உங்கள் கடிதம் ஊடக சுதந்திரத்திற்கு நீங்கள் விடுக்கும் நேரடியான மிரட்டல். உங்களின் இந்த மிரட்டலுக்கு எங்களின் பதிலாக உங்கள் தேவாலயம் சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆயிரம் ஆவணங்கள் வெளியிடப்படும்” என்று பதிலறிக்கை விடப்பட்டது. அத்தொடு நில்லாமல் அடுத்த வாரமே, ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தில் சொன்னபடி வெளியிடப்பட்டது. ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்பதை உலகுக்கும் சொல்லாமல் உணர்த்தினார் ஜூலியன். அதன் பிறகு அத்தேவாலயக் குழுமம் வாயேத் திறக்கவில்லை :) .இது வரை நிறுவனங்களையும், அரசாங்கத் துறைகளையும் சோதித்துப் பார்த்த ஜூலியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் தனிநபர் குறித்த சட்டப்பாதுகாப்பினைப் பரிட்சித்துப் பார்க்க சிக்கியவர் தான் அலாஸ்கா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சாரா பாலின். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர். அழகுக்கும் “அறிவு”க்கும் பெயர் போனவர். இவரின் ‘புத்தி’சாலித்தனமான பேட்டிகளும், அறிக்கைகளும் அமெரிக்காவில் மிகப்பிரசித்தம் :D . சில பேர் முகத்தைப் பார்த்தாலே எப்படியும் கடன் தந்து விடுவார் என்று கணிப்பவர்கள் இருக்கும் இக்காலத்தில், சாராவைப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ, அவரின் யாஹூ மின்னஞ்சல் முகவரி, விக்கிலீக்ஸ் புண்ணியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு மாகாணத்தின் கவர்னரின், அதுவும் ஒரு பெண்ணின் மின்னஞ்சலில் என்னென்ன வில்லங்கங்கள் இருந்தன?… அடுத்த பகுதியில்.

பகுதி 7
அமெரிக்க அரசாங்கம் சாரா பாலின் குறித்து கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருந்தாலும், உள்ளுக்குள் உதறல் இருந்தது உண்மை. காரணம் ஊரெல்லாம் வளைய வரும் ஜூலியன், நாளை நம் மடியில் கை வைத்தால் என்ன செய்வது என்ற கவலைப் பட்டு தாடி வளர்த்துக் கொண்டிருந்தனர். கவலைப்படுவதோடு நின்று கொள்ளாமல் ஜூலியனை முழுமையாக சி.ஐ.ஏ உளவாளிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது. சுற்றிலும் நடப்பது குறித்து ஜூலியன் உணர்ந்தே இருந்தார். இது வரை ஜூலியன் நடத்திய அனைத்துப் பரிசோதனை முயற்சிகளுமே வெற்றியே. சட்ட ரீதியாக யாரும் அவரது சட்டையைக் கூடத் தொட முடியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறதென்றாலும் மனதுக்குள் ஜூலியனுக்கு ஒரு கவலை. காரணம், ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் “இதெல்லாம் எப்ப்டிண்ணே உங்களுக்கு மட்டும் சிக்குது” எனக் கேட்கும் போதெல்லாம், “அது ராமசாமி கொடுத்தது…. இது கந்தசாமி கொடுத்தது…” என்பதே வழக்கம். ஜூலியனின் சுழியை அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத் தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட ரீதியாகத் தன்னைப் பாதுகாக்கி ‘விக்கி’ எனும் இணையச் சித்தாந்தத்தினைக் கேடயமாக்குகிறார் என்றெல்லாம் குரலெழுப்பித் தங்கள் முகமும் ஊடகங்களில் வருமாறு பார்த்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் ஜூலியனும் சி.ஐ.ஏவும் பங்காளிகள், தங்களின் எதிரிகள் மீது திட்டமிட்டுத் தாக்குவதற்கு ஜூலியனைப் பகடைக்காயாக்குகிறது, அமெரிக்காவின் உளவுத்துறை என்று கூறி அமெரிக்காவின் சுப்பிரமணியசாமியாகினர்.இதற்கெல்லாம் ஜூலியனுக்குப் பதிலளிக்க நேரமில்லை. தனதுக் கடைசி விஷப்பரிட்சையாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையோடு லேசாக உரசிப் பார்த்து விட்டு, பின்பு முழுத் தாக்குதலையும் தொடங்கலாம் என்பது தான் அடுத்தகட்ட நகர்வு.அத்திட்டம் ஜூலியன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒருசேரப் புறந்தள்ளியதுடன், அப்போது வெளிவந்த ஆவணம் உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இம்முறை தான் தங்கியிருந்து செயல்பட ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடு ஐஸ்லாந்து, முதல்முறையாக கூடவே இருந்து நடப்பதையெல்லாம் கண்டுகளிக்கப் பார்வையாளராக அமெரிக்காவின் நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். அப்பத்திரிக்கையாளரின் ஜூலியனுடான ஐஸ்லாந்து அனுபவங்கள் கட்டுரையாக வெளிவந்து மிகப்பெரியத் தாக்கத்தை உண்டு பண்ணியது, ஜூலியன் எதிர்பார்த்தது போலவே ;) . அடுத்த பகுதியில் தொடரும்….

பகுதி 8
அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது. இப்படி உலகின் பலம் வாய்ந்த வான்படையின் முக்கிய ஆட்டக்காரர் தான் அபெச்சி (apache) எனப்படும் கனரக ஆயுதங்கள் பொருத்தப் பட்ட உலங்கு ஊர்தி (helicopter). ஈராக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வான்படையினர், அபெச்சி ஒன்றினில் நகர்வலம் செல்லும் பொழுது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒன்று குறித்த காணொளி வெளியீடு தான் ஜூலியனின் ஐஸ்லாந்து விஜயத்தின் முக்கிய நோக்கம். விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அனைத்து ஜூலியனால் ஹேக் செய்தே வெளியிடப்படுகின்றன,சி.ஐ.ஏவின் கையாள், விக்கி என்பதே ஒரு மோசடி போன்ற பல மாங்காய்களுக்கு இந்த ஒரு வெளியீடு மூலம் ஒரு சேர குறி வைத்திருந்தார் ஜூலியன். தன் நியூயார்க்கர் பத்திரிக்கை நண்பருடன் ஐஸ்லாந்தில் வந்திறங்கியதும் ஜூலியன் செய்த முதல் வேலை ‘நாங்கள் ஐஸ்லாந்து போலீஸ் மற்றும் சி.ஐ.ஏ வின் கூட்டுக் கண்காணிப்பில் இருக்கிறோம்” என்று டிவிட்டியது தான். ஜூலியன் ஏதோ விபரீதத்திற்குத் திட்டம் போடுவதை ஒருவாறாக அமெரிக்கா மோப்பம் பிடித்திருந்தாலும், இம்முறை பலியாடு யாரென்பதை அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமலே போனது ஜூலியனின் தொழிநுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. ஐஸ்லாந்தின் ஆளரவம் அதிகமில்லா ஒரு வீடு “எரிமலை குறித்து எழுத வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்காக” என்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.
அடுத்த சிலமணி நேரத்தில் விக்கிலீக்ஸ் தளத்தின் ஐஸ்லாந்து கிளைக் கழகக் கண்மணிகள் புடை சூழ ஆறு மடிக்கணினிகள் வலையமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு போர்க் கட்டுப்பாடு அறை போல காட்சியளித்த அந்த வீட்டில், ஜூலியனின் தலைமையில் வேலை ஆரம்பித்தது. அறையில் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் உணவுப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கிருந்த யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எப்பொழுதாவது கேட்கப்படும் ஒரு சிலக் கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலியன். அவர்கள் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு காணொளிக் கோப்பு. அதன் உண்மைத் தன்மை முதலில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு, அதனை அனுப்பியவர் குறித்த பின்புலங்கள் விசாரித்த பின் திருப்தியளித்ததும், காணொளியின் தேவையில்லாத பகுதிகள் வெட்டப்பட்டன. வெகுஜன ஊடகங்களுக்கான செய்தியறிக்கைத் தயார் செய்யப்பட்டது. அனைத்தையும் ஒரு முறை ஆழ்ந்து கவனித்த ஜூலியன் சிற்சிறு குறைகளைச் சுட்டிக் காட்டியதும் சரிசெய்யப்பட்டது.
அனைத்தும் தயார், இறுதியாக ஒரு முறை ஜூலியன் அனைத்தையும் சரிபார்த்ததும், அனைத்துக் கோப்புகளும் ஜூலியனின் மடிக்கணினிக்கு நகலெடுக்கப்பட்டன. மற்ற மடிக்கணினிகளின் கோப்புகள் அனைத்தும் சிறப்பு மென்பொருட்கள் கொண்டு துடைத்தெடுக்கப்பட்டன. ஜூலியன் அனைத்துக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் (file headers) தகவல்களை நீக்குவதில் மூழ்கியிருந்தார். அதே நேரத்தில் வீட்டின் அறைகள், குளிர்சாதனப் பெட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்ததும் அனைவரையும் நிமிர்ந்து கூர்மையான பார்வை பார்த்தபடி ஜூலியன் கேட்ட கேள்வி, ‘காணொளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?”.. பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஜூலியன் தேர்வு செய்தது “collateral murder”. விக்கிலீக்ஸ் தளத்திற்கான வழங்கிகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் காணொளியின் தீவிரத்தையும், எந்த நிர்ப்பந்தத்திலும் நீக்காமல் இருக்கவும் உறுதிசெய்து கொண்ட ஜூலியன், கூகுளின் யூ-டியூப் தள நிர்வாகிகளிடமும் பேசி அங்கும் காணொளியினை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டார். அடுத்த சில நொடிகளில் கோப்புகள் வலையேற்றப்பட்டன. ஜூலியன் திருப்தியென கட்டை விரல் உயர்த்தியதும், சடுதியில் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும், மடிக்கணினிகளும் மூட்டை கட்டிக் கொண்டு அனைவரும் வெளியேறி மறைந்தனர்.யாரும் அங்கிருந்ததற்கான அந்த அறிகுறியுமில்லாமல் உலகின் முகத்தில் ஓங்கியறையும் உண்மை குறித்த ஒரு காணொளியினை வலையேற்றிட உதவியத் திருப்தியுடன் அந்த இடம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. மறுநாள் உலக ஊடகங்கள் அனைத்தும் கூவிக்கூவிக் களைத்தன. ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. அப்படி என்ன இருந்தது அந்த காணொளியில்?. எந்த வித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்சரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை என சகட்டுமேனிக்கு வேட்டையாடப்படுவதை விரிவாகக் கூறிக்கொண்டிருந்தது. அதில் இறந்தவர்களில் புகழ்பெற்ற “reuters’ செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்தததும், அந்த காணொளி தாக்குதலில் ஈடுபட்ட அதே அபெச்சி உலங்கு ஊர்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யக் குறிப்பு. அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதிமுறைகள் சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. ஜூலியன் சி.ஐ.ஏவின் கையாள் என்றவர்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தனர். இராணுவத் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த காணொளி எப்படி ஜூலியனின் கைக்குச் சென்றது, எடுத்தது யார், விக்கிலீக்ஸ் தளத்திற்குக் கொடுத்தது யார் ? இல்லை தன் பழையப் பழக்கத்தில் ஜூலியன் ‘தன் கையே தனக்கு உதவி’ முறையில் இராணுவ வலையமைப்பிலிருந்து சுடப்பட்டதா என்று பல கேள்விகளோடு அலைந்த கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, சில வாரங்களில் பதில் தேடி வந்தது… அடுத்த பகுதியில்…

பகுதி 9

விக்கிலீக்ஸ் வரலாற்றில் collateral murder காணொளி வெளியீடு ஒரு மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. அதுவரை வெறும் உலக அரசியல் விமர்சகர்களாலும், சக பத்திர்க்கையாளர்களாலும் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த ஜூலியன், இப்போது மனித உரிமை, உலக அமைதி போன்ற விஷயங்களுக்காகச் செயல்பட்டு வரும் குழுமங்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளுக்கு புதிய ஊடக ஒழுங்குமுறை சட்டத்திருத்தங்களுக்கான கருத்தரங்குகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு ஜூலியன் விஸ்வரூபமெடுத்திருந்தார்.
மழைக்காலத்தில் நம்மூர் தெருக்களில் ஆடைகளில் மழைநீர் பட்டுவிடாமல் கவனமாக நடப்பது போல், ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்த ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களைக் கொடுப்பவர்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவராமல் பார்த்துக் கொள்வதே விக்கிலீக்ஸ் தளத்திற்கான பலம் என்பது புரிந்தே இருந்தது. இதன் காரணமாக பலரும் ஜூலியன் தானே ஹேக் செய்து வெளியிட்டு விட்டு, விக்கிலீக்ஸ் மூலம் தன் கல்யாணத்திற்குத் தானே மேளம் அடித்துக் கொள்கிறார் என்று விமர்சிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலை கொள்வதற்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை. ஆனால் இதையெல்லாம் தகர்ப்பதைப் போல ஒரு நாள் நள்ளிரவில் collateral murder காணொளிக் காட்சி உட்பட பல இராணுவ ஆவணங்களை விக்கிலீக்ஸ் தளத்திற்கு அனுப்பி வைத்ததாக பிராட்லி என்னும் 22 வயது அமெரிக்க இராணுவ வீரர் ஈராக் இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டு, குவைத்தில் வைத்து விசாரித்து வருவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்து விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை அவதானித்து வருபவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.
ஜூலியனைத் தவிர அனைவரும் விக்கிலீக்ஸ் தளத்தின் தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சிறிதே கவலை கொண்டிருந்த வேலையில், பிராட்லி தானே முன்வந்து இணைய அரட்டையில் குறுகிய காலத்திற்கே அறிந்திருந்த ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் ஹேக்கிங் நிபுணருமான அட்ரியன் என்பவரிடம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு தான் அனுப்பிய விவரங்கள் குறித்து சிலாகித்துச் சிலிர்த்து வைக்க, அட்ரியன் அதை அப்படியே அமெரிக்க அரசாங்கத்திடம் புட்டு வைக்க, பிராட்லி கைது செய்யப்பட்டார். இன்றளவும் அமெரிக்க இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் பிராட்லி மீதுள்ள குற்றச்சாடுகளுக்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனைக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர்கள் இருவரை பிராட்லிக்காக வாதிட விக்கிலீக்ஸ் சார்பில் நியமித்தாலும், அமெரிக்கா அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது. இதுநாள் வரை விக்கிலீக்ஸ் தளத்தின் சார்பாக, பிராட்லி தான் தங்களுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தாக எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும், விக்கிலீக்ஸ் தளத்தின் மீதோ அல்லது ஜூலியன் மீதோ பெரிதாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பிராட்லியின் கைதுக்குப் பிறகு ‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல..தனியாளா இவ்வளவு பண்ண முடியுமா…இவனுக்கு இதெல்லாம் யாரோ அனுப்புறாங்கய்யா…” என்ற குரல்கள் பரவலாக எழுந்தடங்கியது.
அனைத்து சோதனை முயற்சிகளும் வெற்றியில் முடிந்த திருப்தியில், ஆப்கன் போர் குறிப்பு வெளியீடுகளுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த ஜூலியனுக்கு, பிராட்லியின் கைது பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. என்றுமே தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ தொல்லைகள் வரும்போது ஜூலியன் அமைதி காத்ததே கிடையாது, சீண்டச் சீண்டச் சீறுவதே ஜூலியனின் கொள்கை. பிராட்லியின் கைது, எங்கு சென்றாலும் உளவாளிகளின் நோட்டம் என்று கடுப்பாகி போன ஜூலியன் திட்டமிட்டதைக் காட்டிலும் விரைவாக ஆப்கன் போர்க் குறிப்புகளை வெளியிட்டு அமெரிக்காவிற்கு வெறியேற்றியிருந்தார். இதுவரை போராடிப் பார்த்த அமெரிக்கா, தொழில்நுட்பத்தில் ஜூலியனுடன் மோதி வெற்றி பெற முடியாதென்பதை உணர்ந்திருந்த அமெரிக்கா, ஜூலியனுக்காக வேறொரு திட்டம் வைத்திருந்தது. தன் எதிரிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டே இருப்பதும், அவர்களை தன் விக்கிலீக்ஸ் வெளியீடுகளாலேயே அடக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த ஜூலியன் அடுத்து அமெரிக்காவிற்காக வைத்திருந்த அதிரடி அணுகுண்டு தான் Cablegates என்றழைக்கப்படும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்களின் வெளியீடு. ஆனால் அவற்றைத் தயார்ப்படுத்துவதற்கு ஜூலியனுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. அந்த சில மாதங்கள் இடைவெளியில் ஜூலியனின் வாழ்வில் மீண்டும் வசந்தகாலம் எட்டிப்பார்த்தது. அதுவரை துணைவியில்லாத, தனிமையான, ரகசிய இருப்பிடங்களில் பதுங்கித் திரியும் வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிருந்த ஜூலியனுக்கு collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க்குறிப்புகள் வெளியீடுகளுக்குப் பின் அனைத்துத் தரப்பினராலும் ஆராதிக்கப்படும் நாயகன் அந்தஸ்து கிடைத்திருந்தது.அந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், தொலைக்காட்சிப் பேட்டிகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். சென்ற இடமெல்லாம் சிறப்பு வரவேற்பும், இளம் சமுதாயத்தின் ஆரவாரமும் ஜூலியனுக்கு உற்சாகமூட்டியது. இக்காலகட்டத்தில் ஸ்வீடனில் ஒரு தேவாலயக்குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது தான் ஜூலியன் என்னும் சிங்கம், இரண்டு புள்ளிமான்களால் சாய்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்தேறியது. ‘சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே – நாகராஜ்’ போன்ற வாசகங்களைக் கொண்ட ஆட்டோக்களைத் தன் வாழ்நாளில் பார்த்துமறியாத ஜூலியனுக்கு ஸ்விடனில் நடந்த அசம்பாவிதம் என்ன? என்ன? என்ன? விரிவாக அடுத்த பகுதியில்.

பகுதி 10

‘நான்கு மாதங்களுக்கு முன்பு’ என்று திரைப்படப் பாணியில் அறிவிப்புப் போட்டால் அடுத்த காட்சியில் ஸ்விடன் விமான நிலையத்தில் ஜூலியன் இறங்கி வரும் காட்சியினைக் கண்டு இன்புறலாம். சுமார் ஒரு வார காலம் தங்க வேண்டிய பயணம், பயணத்தின் நோக்கத்தினை “போரும், ஊடகங்களின் பங்கும்” என்ற தலைப்பில் இணையத்தின் போர்வாள் ஜூலியன் சிறப்புரையாற்றுகிறார், அலைகடலென வாரீர் என்று ஸ்விடன் முழுக்க விளம்பரப்படுத்தியாகி விட்டது. இப்பயணத்திற்காக ஜூலியனிடம் ஸ்விடனைச் சேர்ந்த ஒரு தேவலாயக் குழுமத்தின் ( Sweden association of Christian social democrats) செயலாளரும், ஊடகத் தொடர்பாளாருமான அன்னா (anna ardin, age: “31″ ) தொடர்பு கொண்ட பொழுது ஜூலியனின் ஒரே நிபந்தனை, தனக்கு தங்குவதற்கு ரகசியமான இடம் வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியான நேரமது என்பதால் ஜூலியனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அந்நேரத்தில் ஜூலியன் என்ன கேட்டாலும் செய்து கொடுத்து தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதற்கு பலரும் வரிசை கட்டி நிற்கும் காலமது என்பதால், தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி நாட்களில் தனக்கு வேறொரு முக்கிய வேலை காரணமாக, தான் வெளியூர் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்றே திரும்புவதால் தனக்கு எந்த வித தொந்திரவும் இல்லை என்றும் தயங்காமல் சொல்ல, ஜூலியனும் சம்மதித்தார். ஸ்விடன் சென்றதும் அனைத்தும் சொன்னபடி நடக்க நிதானமாக இருந்த ஜூலியன் எனும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்பாராதவிதமாக (?) சென்ற வேலை முடிந்த காரணத்தால் நிகழ்ச்சிக்கு முதல் நாளே திரும்பி வந்த அன்னாவைக் கண்டதும் கரையைக் கடந்தது :) . இருவரும் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை குறித்து சிறு விவாதத்திற்குப் பிறகு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
இன்றையத் தேதிக்கு உலகிமே அண்ணாந்து பாக்கும் ஒரு நபர், இணையத்தின் புரட்சி நாயகன், அட்டகாசமான தோற்றமும், தொழிநுட்ப அறிவும் கொண்ட ஒருவருடன் தனியே தங்கும் வாய்ப்பு. செல்லுமிடமெல்லாம் ஜூலியனின் வலையில் சிக்குவதற்காக பெண்கள் தாங்களே கையில் வலையுடன் காத்திருந்த தருணத்தில், ஜூலியன் அன்னாவை நோக்க, அன்னா ஜூலியனை நோக்க..மேற்கத்தியக் கலாச்சாரத்தின் சம்பிரதாய வைபவங்கள் இருமன விருப்பத்துடன் இனிதே அரங்கேறின. இடையில் ஜூலியன் பயன்படுத்திய ஆணுறை கிழிந்து போனதும், சற்றேத் தயங்கிய அன்னா பின் உணர்ச்சி வேகத்தில் தொடர்ந்ததும் சரித்திர நிகழ்வுகள். மறுநாள் ஜூலியன் உரையாற்றும் நிகழ்ச்சி நன்றாகவே நடந்தது. நிகழ்ச்சியின் போது எல்லாரும் ஜூலியனைப் பார்க்க, ஜூலியன் மட்டும் முதல் வரிசையில் இருந்த ஒரு பிங்க் ஸ்வெட்டரையே அவ்வப்போது கவனிக்க, அங்கு ஒரு பூந்தோட்டமே பூத்துக்குலுங்கியது. பிங்க் ஸ்வெட்டரின் பெயர் சோபியா, வயது 26. நல்ல நேரத்திலும் :D ஒரு கெட்ட நேரமாக, ஒரே நேரத்தில் பல மைதானத்தில் விளையாட ஆசைப்பட்ட ஜூலியன், நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தின் போது சோபியாவின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டார்.அன்றிரவு ஜூலியனுக்கு தனது வீட்டில் சிறப்பு விருந்தளித்த அன்னா, அதனை மகிழ்ச்சியோடு ட்விட்டரில் “உலகின் மிகச்சிறந்த, புத்திசாலியோடு இருக்கிறேன்” என்று பதிவு செய்தார். விருந்தோடு விருந்தாக சோபியாவிடம் தொலைபேசிய ஜூலியன், மறுநாள் அன்னாவிற்கு போக்குக் காட்டி விட்டு, மல்லிகைப்பூ, அல்வா சகிதம் சோபியாவை சந்திக்கச் சென்றார். அங்கும் இரவும் மறுநாள் காலையும் உணவோடு, உறவும் பரிமாறப்பட்டது. இரவுச் சாப்பாட்டுக்கு ஆணுறை பயன்படுத்திய ஜூலியன், காலை சிற்றுண்டிக்கு எதுவும் பயன்படுத்தவில்லை. முதலில் தயங்கிய சோபியா, பின்னர் தடுக்கவில்லை. அன்னாவின் வீட்டிற்குத் திரும்பிய ஜூலியன், பின்னர் ஸ்விடனை விட்டு வெளியேறி, விக்கிலீக்ஸ் தளத்தின் அடுத்த வெளியீட்டுக்கான (cable gates) வேலைகளில் ஆழ்ந்தார். இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. சோபியாவிற்கு மட்டும் ஜூலியனுடனான தனது காலைச் சிற்றுண்டி குறித்து மனக்கவலை(STD) இருந்து கொண்டே இருந்தது, அன்னாவுடன் தானே தங்கியிருந்தார் ஜூலியன், அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர, அதுவரை தனக்கு மட்டும் தான் கிடைத்தது என்ற கர்வம் கலகலக்க, கலவரம் பிறந்தது. ஸ்விடன் நாட்டு சட்டத்தின் படி அன்னா வழக்குத் தொடர்ந்தார், முதலில் விசாரித்த நீதிபதி வழக்கினைத் தள்ளுபடி செய்ய, பின்னர் மேல்முறையீட்டின் படி வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கும், ஜூலியனின் கைதுக்கும் உத்தரவிடப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் தகவல் வந்த தருணத்தில், ஒட்டு மொத்த இணைய உலகமும் அந்த பெண்களின் புகைப்படங்களைத் தேடித் தேடி ஓய்ந்தது உபதகவல் :) .இனி நடந்தவைகளின் சிக்கலான பக்கங்களைப் பார்ப்போம். ஸ்விடன் பெண்ணுரிமைக்குக் கட்டற்ற சுதந்திரமும், செல்லமும் கொடுக்கும் இடமென்பதால் இயற்கையாகவே ‘பம்மல் K. சம்பந்தம்’ சிம்ரன்கள் நிறைந்த நாடு. ஆணுறை இல்லாமல் உறவு கொண்டாலோ அல்லது உணர்ச்சி வேகத்தில் தடுக்க முடியாமல் போனாலோ, அடுத்த வாரம் ஆற,அமர வழக்குத் தொடுக்கலாம் (ஸ்விடன் செல்லும் அன்பர்கள், கவனம் :D ). மேற்சொன்ன இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலுமே தங்கள் சம்மதத்துடன் தான் அனைத்துமே நடந்த்துள்ளதென்பதை இருதரப்பினருமே மறுக்கவில்லை. ஆணுறை உபயோகிக்காமல் சோபியாவிடமும், கிழிந்து போனதாக அன்னாவிடமும் நிகழ்ந்தது இரண்டும், ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இல்லை அதெல்லாம் எதேச்சையாக நிகழ்ந்தது, இந்த வழக்கே அரசியல் பின்ணணி வாய்ந்தது என்பது ஜூலியனின் வாதம்.இந்த வழக்குப் பிரச்சினை உச்சத்திற்கு வருவதற்குள் ‘Cable gates’ எனப்படும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். அனைத்து ஆவணங்களும் இரண்டு விஷயங்களை அம்பலப்படுத்தி அமெரிக்காவை நிலைகுலையச் செய்தது. ஒன்று அமெரிக்காவின் அனைத்து தூதரகங்களும் தாங்கள் செயல்படும் நாடுகளை வேவு பார்க்கின்றன. இரண்டு அந்தந்த நாட்டுத் தலைவர்களை முள்ளம்பன்னித் தலையா, டப்பாத் தலையா என்று கவுண்டமணியே கூசும் அளவுக்கு தனிப்பட்ட முறையில் விளித்திருந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளின் ஒற்றுமையின் மீதானத் தாக்குதல் என்றெல்லாம் ஹிலாரி ஊடகங்களில் ஒருபுறம் கபடியாடிக் கொண்டே, மறுபுறம் ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து ‘அதெல்லாம் டூப்ளிக்கேட்டு.. ஏமாத்துறான்..நம்பாதீங்க” என்றெல்லாம் கெஞ்சிக் கொண்டிருந்தார். முதல் முறையாக வரலாற்றில் அமெரிக்காவை சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்த ஜூலியனை, ஸ்விடனின் சிற்றின்ப வழக்கு விவகாரங்கள் துரத்த, விக்கிலீக்ஸ் குழுவின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி ஜூலியன் இங்கிலாந்து பறந்தார். விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க தனது சகல அதிகாரங்களயும் பிர்யோகிக்க ஆரம்பித்திருந்தது அமெரிக்கா.அமெரிக்காவின் முயற்சிகளை மீறி விக்கிலீக்ஸ் தளம் எவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறது, ஜூலியன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்ணணி என்ன? இது சம்பந்தப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டா அல்லது அமெரிக்காவின் அரசியல் சதியா?, அதற்கான தொடர்புகள் குறித்த அலசல்கள், இங்கிலாந்து சென்ற பின் ஜூலியனுக்கு நடந்தவை ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.

பகுதி11
ஒரு ஆதிக்கம் மிகுந்த நாட்டின் அரசாங்கம் நினைத்தால் சரியோ, தவறோ என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்தான செயல்முறை விளக்கமும், இணையத் தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்கள் நினைத்தால் ஒரு கணிணியையும், இணைய இணைப்பையும் வைத்துக் கொண்டு யாரையும் அலறியடித்து ஓட வைக்க முடியுமென்பதும் சிறப்புற நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஜூலியன் இங்கிலாந்திற்கு ஆறு மாத விசாவில் வருகை தந்திருக்கிறார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு பக்கம் புதிது, புதிதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்கள் அனுதினமும் அம்பலமாகிக் கொண்டே இருந்தன. மறுபக்கம் ஸ்விடன் அரசு இண்டர்போல் அமைப்பை அணுகி தங்களிடம் ஒரு பிராது இருக்கிறதென்றும், அது குறித்தான பஞ்சாயத்துக்கு உடனே ஜூலியனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுத்தது. இண்டர்போல் ஜூலியனைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து அரசை அணுகிய போது, ஆவணங்களில் ஜூலியனின் பெயர்க்குறிப்பில் எழுத்துப்பிழை இருப்பதைக் கண்டுபிடித்து சிலிர்த்துக் கொண்டு நிராகரித்து விட்டது. ஆவணங்களைத் திருப்பி ஸ்விடனிடம் கொண்டு போய் திருத்தி எழுதிக் கொண்டு வர இண்டர்பொல் அமைப்பிற்கு இரண்டு நாட்கள் பிடித்தன. இப்போது எல்லாம் இருக்கிறது ஆனால், ஜூலியனை எங்கே போய் பிடிப்பதென குழம்பினர். இந்த இடைவெளியை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா ‘நாந்தான் இருக்கேன்ல’ என்று களத்தில் குதித்தது.பொதுவாக ஒரு இணையதளத்தின் பெயர் என்பது தனி விஷயம் (domain name), அந்த இணையத்தளத்திற்கானக் கோப்புகளை அல்லது தகவல்களை வைத்திருக்கும் கணிணி/வழங்கி என்பது தனி விஷயம் (hosting server). இந்த இரண்டையும் கோர்த்து விடும்போது தான் நீங்கள் உங்கள் உலாவியில்(browser) இணையதளத்தின் பெயரை உள்ளிட்டதும் அத்தளத்தின் தகவல்களைப் பார்க்க முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இணையதளத்தின் பெயரும் அதன் கோப்புகளைக் கொண்ட வழங்கி பற்றிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் தான் இணையதளப் பெயர் வழங்கி (DNS – Domain Name Servers). இந்த DNS வழங்கிகள் செயல்படும் விதம் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். கடந்த மூன்று வருடங்களாக ஜூலியன் அமைத்திருந்த உலகளாவிய விக்கிலீக்ஸ் ஆர்வலர்களின் வலையமைப்பினையும், அவர்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு, எல்லாமே ஜூலியன் ஒரு ஆள் தான் என்று நினைத்த அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக நேரிடையாக, உலக மக்கள் அனைவரையும் சாட்சியாக வைத்துக் கொண்டு தனது அதிகாரங்களை ஜூலியனை நோக்கி பிரயோகித்து, விக்கிலீக்ஸ் எனும் தேன்கூட்டில் கை வைத்தது.விக்கிலீக்ஸ் தளத்திற்கென்று உலகெங்கும் பல நிறுவனங்களிடமும் கோப்புகளை சேமித்து வைத்து தங்கள் இணைய தளத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக வழங்கி சேவைகளை (hosting servers) பெற்றிருந்தார்கள். அதன் மூலம் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டிலுள்ள வழங்கிகள் மூலமே விக்கிலீக்ஸ் தளத்தினை எளிதாக, விரைவாக பார்வையிட முடியும். விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய ஆவணங்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் இது போன்ற சில ஏற்பாடுகள் செய்து வைக்கப்படும். முதல் காரணம், ஒரு இடத்தில் தளம் முடக்கப்பட்டால் மறு இடத்தில் வேலை செய்யும். இரண்டாவது, கூட்டம் கும்மும்போது இணையப் போக்குவரத்து அதிகமாகி தளம் செயல்பட முடியாமல் போக வாய்ப்பிருப்பதால் இணையப்போக்குவரத்தினை பல்வேறு கோப்பு வழங்கிகளுக்கும் பிரித்தனுப்பி சமாளிக்க முடியும். இதற்குள் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸ் தளத்தினை அல்-குவைதா, பின் லேடன் அளவிற்கு அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல், அமெரிக்காவின் மீதான இணையத் தாக்குதல் என்றெல்லாம் குரலெழுப்பி கிட்டத்தட்ட விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்காமலும், ஆதரிக்காமலும் இருப்பது தான் தேசபக்தியின் அடையாளம் என்கிற அளவுக்கு பிரச்சாரம் செய்து தங்கள் முகங்களை ஊடகங்களில் காண்பித்து மகிழ்ந்தார்கள். இதையே வாதமாக வைத்து அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடியால் விக்கிலீக்ஸ் தள்த்திற்கான அனைத்து DNS சேவைகளும் முடக்கப்பட்டன, உலகப் புகழ்பெற்ற அமேசான் (Amazon.com) நிறுவனம் விக்கிலீக்ஸ் தளத்திற்காக தாங்கள் வழங்கி வந்த கோப்பு வழங்கிகளுக்கான(hosting server) சேவையினை நிறுத்தியது. இனி யாரும் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்க முடியாது என்று நினைத்து சரக்கடித்து கொண்டாட எத்தனிக்கும் முன்னரே தங்கள் தளத்தினை 30க்கும் மேற்பட்ட வெவ்வெறு புதிய இணையதள முகவரிகள் மூலம் பார்க்கலாம் என்று விக்கிலீக்ஸ் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப் பட்டது. 30 முகவரிகள், நூறாகி, நானூறாகி, இன்றைய தேதியில் ஐநூறுக்கும் மேலான இணைய தள முகவரிகளின் மூலம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் களைகட்டிய வேகத்தினைப் பார்த்து அமெரிக்கா திகைத்துப் போனது.
ஊரெல்லாம் ஊடக சுதந்திரத்திற்கு ஊர்வலம் போகும் அமெரிக்காவில் ஒரு ஊடக நிறுவனம் (அமேசான்) எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தப்படலாம் என்பதை உலகுக்குக் காட்டவே அந்நிறுவனத்திடம் வழங்கிச் சேவையினைப் பெற்றிருந்தோம் என்று ஜூலியன் அலட்சியமாக சொல்லி வைக்க, அமெரிக்காவின் இரத்த அழுத்தம் மேலும் எகிறியது.

ஒரே நேரத்தில் இத்தனை முகவரிகளில்(mirrored sites) எப்படி விக்கிலீக்ஸ் தளம் விரைவாக செயல்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஜூலியனின் கைது, கைதுக்கு எதிரான போராட்டங்கள், பின் பிணையில் வெளிவந்தது ஆகியவை அடுத்தப் பகுதியில்.

பகுதி 12

Mirrored site என்பது ஏற்கனவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் ஒரு இணையத்தளத்தை பெயருக்கேற்றாற் போல் அப்படியே கண்ணாடியாய் பிரதிபலிப்பது தான். ஏன் கண்ணாடி போல என்று விளக்கப்படுகிறதென்றால் அசலான இணையத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ அடுத்த நிமிடம், அப்படியே நகலில் பிரதிபலிக்கப்படும் (relative link). இதைச் சாத்தியப்படுத்துவதற்கு வழக்கம் போல் இணையமெங்கும் மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன, வழக்கம் போல் கூகுளாடி பெற்றுக்கொள்ளலாம். (உதா: HTTrack ). இவ்வாறு பிரதிபலிக்கும் தளங்களைத் (mirrored sites) தயார் செய்வதற்குத் தேவையானப் பொருட்கள் பிரதிபலிக்கச் செய்யும் மென்பொருள், உங்களுக்குச் சொந்தமாக இணைய வழங்கியில் கோப்புகளைச் சேமிக்க இடம், மற்றும் அசல் இணையதளத்தின் இணைய வழங்கியின் விவரங்கள் (hosting servers).

மேற்சொன்ன விவரங்களை, பிரதிபலிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு இயங்க விட்டுவிட்டால், அதன் பின்னர் நம் மற்ற வேலைகளை கவனிக்கப் போய்விடலாம். அந்த மென்பொருள் என்ன தான் செய்யும்?. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அசல் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும், பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அசல் தளத்தில் ஏதேனும் புதிய கோப்புகள் வலையேற்றப்பட்டிருந்தாலோ அல்லது இருந்த கோப்புகள் நீக்கப்பட்டிருந்தாலோ அதே மாற்றங்களை பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் செயல்படுத்தும்(Sync.). விக்கிலீக்ஸ் ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பதும், அவர்களுக்கும் இணைய வழங்கிகள் கோப்புகளைச் சேமிக்க இடம் வைத்திருப்பதென்பது நம்மூரில் கேபிள் இணைப்பைப் போல, சகலரும் வைத்திருப்பார்கள்.

விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்கி விட்டோம் என்று அமெரிக்கா ஊடகங்களில் உரத்துக் கூவிக் கொண்டிருந்த பொழுதுகளில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலர்கள் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் விக்கிலீக்ஸ் தளத்தின் நகல்கள் நூற்றுக்கணக்கில் தயாராகிக் கொண்டிருந்தன. இவ்வாறு பிரதிபலிக்கப்படும் தளங்கள் யாவும் உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ள நாடுகளின் வழங்கியில் சேமிக்கப் பட்டதென்பதும், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டத்தின் படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதென்பது மிகக் குஷ்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றளவும் பல நாடுகளில் இணையத்தொடர்புகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போதிய சட்டங்கள் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இவையனைத்தும் நடந்து கொண்டிருந்த வேளைகளில் ஜூலியனைக் கைது செய்ய லண்டன் மாநகரக் காவல்துறை முயற்சி செய்ததும், ஒவ்வொரு நாளும் புதிதாகச் சில ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தின் மூலமாக வெளியிடப்படுவதும் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்தன. தளத்தையும் முடக்க முடியவில்லை, ஆளையும் பிடிக்க வைக்க முடியவில்லை என்று குமுறிய அமெரிக்காவிற்குத் தினமும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த ஆவணங்களின் கொசுத் தொல்லையும் சேர்ந்து தாங்கொனாத் துயரமடைந்து, ஜூலியனை நோக்கித் தன் இறுதி தாக்குதலை நடத்தியது. ஜூலியன் பயன்படுத்தும் விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், Paypal தளத்தின் கணக்குகள், VISA மற்றும் MasterCard கடன் அட்டைகள் என சகலமும் முடக்கப்பட்டன. விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகளுக்கும், ஜூலியன் இணையத்தில் ஆடும் கண்ணாமூச்சிகளுக்கு பணம் ரொம்ப, ரொம்ப அவசியம். விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் அவர்களுடன் சேர்ந்து வெளியிடும் அமெரிக்க, ஐரோப்பிய அச்சு ஊடகங்கள் மூலம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு நிதி அளிக்கப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டாலும்,ஜூலியனின் முக்கிய நிதி ஆதாரம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு, Paypal மூலம் நன்கொடை வழங்குபவர்கள் தான். தனது ஜீவநாடியான நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டதும், இனி மறைந்திருந்தும் உபயோகமில்லை என்பதை உணர்ந்த ஜூலியன், தனது வழக்கறிஞர்கள் துணையுடன் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நிகழ்ந்தது. ஊரையே உலையில் போட்டு விட்டு மலர்ந்த முகத்துடன், பூரித்துப் போய் சிறை செல்லும் இக்காலத்தில், எந்தவித உணர்வையும் காட்டாமல் சரணடைந்த ஜூலியன், சிறைக்குச் செல்வதற்கு முன்பு விக்கிலீக்ஸ் வழக்கம் போல் செயல்படும் என்று சொல்லிச் செல்ல ஜூலியன் மறக்கவில்லை. அதுவரை ஜூலியனால் எதுவும் சாத்தியம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் ஆர்வலர்களுக்கு இச்சம்பவம் மிகுந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது.
இக்கோபத்தின் வெப்பம் அப்படியே ஜூலியனை முடக்கியவர்களிலேயே முக்கியமானவர்களான VISA மற்றும் MasterCard பக்கம் திரும்பியது. வெறும் கணினியும், இணைய இணைப்பும் வைத்துக் கொண்டு சிறிய அறைக்குள் செயல்படும் இவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தவர்கள் அனைவரையும் வாய்பிளக்கும் வகையிலான இணையப்போர் நடந்தது. பெயரிலிகள் இணைய நற்பணி மன்றம் (anonymous) என்று தங்களை அழைத்துக் கொண்ட குழு ஒன்று, “Operation Payback” என்ற தாக்குதல் திட்டத்தினை அறிவித்தது. DDoS attack என்ற இணையக் குட்டிச்சாத்தான், VISA மற்றும் MasterCard இணையத் தளங்களின் மேல் ஏவி விடப்பட்டது. DDoS (Distributed Denial of Service) தாக்குதல் என்பது அரசியல் கட்சிகள் ஊர்வலம் சென்று சாலைகளை முடக்குவதைப் போலத் தான். சும்மா இருக்கும் இணையத்தளத்தினை நோக்கி பல்வேறு கணினிகளில் இருந்து ஏகப்பட்ட தகவல் இணைப்புகளை அனுப்பி போலியான இணையப் போக்குவரத்தினை அளவுக்கு மீறி ஏற்படுத்துவதன் கொடுமை தாங்காமல், தாக்குதலுக்கு உள்ளாகும் இணைய தளத்தின் வழங்கிக் குப்புறப் படுத்துக் கொள்ளும். இத்தாக்குதலை தொடுப்பதற்கென சிறப்பு மென்பொருட்கள் உள்ளன.இந்த தாக்குதலில் (operation payback), Visa மற்றும் Mastercard தளங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டாலும், இலவச இணைப்பாக amazon நிறுவனத்தின் இணையத்தளத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அத்தளம் வெற்றிகரமாக சமாளித்தது. இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், சந்தடி சாக்கில் விக்கிலீக்ஸ் தளத்தின் மீதும் DDoS தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அத்தாக்குதல் சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் சார்பானவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது :) .ஜூலியனின் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், கைது செய்யப்பட்ட ஜூலியனுக்கு நடந்தவை, விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்…

பகுதி 13
இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.

அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் “நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன” என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.

இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் ‘உள்ளேன் ஐயா’ சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.

ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.

மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.

“எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்” – ஜூலியன்.

இது வரை தொடர்ந்து இவ்வளவு எழுத சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அமைந்ததில்லை. ஒரே ஒரு சிறிய பதிவிடலாம் என்று எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி தொடங்கப்பட்ட இத்தொடர் இவ்வளவு தூரம் நீண்டதற்கு தொடர்ந்து ஊக்கமளித்த நீங்களனைவருமே காரணம். உங்கள் பின்னூட்டங்களும், அறிவுரைகளுமே கம்பெனியின் சோம்பலை விரட்டியடித்து, இயங்க வைத்ததென்பது குறிப்பிடத் தக்கது. ஜூலியன் ஒரு வாழும் வரலாறு என்பதாலும், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆளென்பதாலும், குறிப்பிட்டக் கால இடைவெளியில் ஜூலியன் குறித்து நிச்சயம் எழுத முயற்சிக்கப்படும்.

நன்றி: சுடுதண்ணி